திரிந்த வார்த்தையை நாங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும்..? 'திராவிடம்'  குறித்து சீமான் கேள்வி...

"தமிழம் திரிந்து ' திராவிடம்'  ஆனதாக  சொல்கிறார்கள் : திரிந்த பாலையே பயன்படுத்தாத நாங்கள் திரிந்த வார்த்தையை ஏன் பயன்படுத்த வேண்டும்..?"  என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிந்த வார்த்தையை நாங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும்..? 'திராவிடம்'  குறித்து சீமான் கேள்வி...

நாம் தமிழர் கட்சி சார்பில் விடுதலைப் போராட்ட வீரர் வ.உ .சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் விழா சென்னை சின்னப் போரூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.  கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, 

வ.உ.சிதம்பரனார் விடுதலைப் போராட்ட வீரர்களில் முதன்மையானவர், மாடு கூட இழுக்க தயங்குகிற செக்கை மண்ணின் விடுதலைக்காக இழுத்தார். 

45 நாள் கொளத்தூர் மணி, மனியரசனுடன் கோவை சிறையில் இருந்தேன். கோவை சிறையில் இருந்தபோது வ.உ.சி இழுத்த செக்கை தொட்டு தொட்டு பார்ப்பேன். சிறையில்  அவர் குறித்து பழுதுற கற்றவர் என்று பிழையாக  இருந்ததை மணியரசன் ஐயா சொல்லி பழுதற கற்றவர் என்று மாற்றினோம். 

நாங்கள் இன்று பேசும் தமிழ்த் தேசிய அரசியலை தமிழ் நேசன் இதழ் மூலம் அன்றே பேசினார் வஉசி  , தமிழர்களின் மானம் கப்பலேற கூடாது என்பதற்காக சொந்த சொத்தில் கப்பல் இயக்கினார். செல்வந்தராக இருந்தவர் தனது இறுதி காலத்தில் மண்ணெண்ய் விற்றார். 

தமிழ் இலக்கியங்களை திராவிடக் களஞ்சியம் என பெயர் மாற்றுவது அவசியமற்றது என அறிக்கை கொடுத்து வழக்கு தொடர்ந்துள்ளோம். நாங்கள் குட்டையை குழப்புவதாக சிலர் கூறுகின்றனர் , நாங்கள் குழப்ப வந்தவர்கள் அல்ல.. குட்டையை கைப்பற்ற வந்தவர்கள். தமிழர் என்ற வார்த்தை இல்லாமல் இனி அரசியல் இங்கில்லை. இந்திய நாட்டை உரிமை கொண்டாடும் உரிமை நாகர் இன வழி வந்த தமிழர்களுக்கே உண்டு என்றார் அம்பேத்கர் . 

தமிழர்கள் ஏன் திராவிட முகமூடி அணிய வேண்டும். தமிழம் என்பது திரிந்து திராவிடம் ஆகிவிட்டதாக கூறுகின்றனர். திரிந்த பாலையே பயன்படுத்த ,  மாட்டோம் , திரிந்த வார்த்தையை ஏன் பயன்படுத்த வேண்டும். 

10 ஆண்டாக கட்சி நடத்துகிறேன் என்னிடம் எந்த பிராமணனும் சண்டை போடவில்லை. முத்துராமலிங்கத் தேவர் கூறியபடி ஆரியமும் திராவிடமும் இன்று கைபிடித்து நிற்கிறது. மனுஸ்மிருதி யிலிருந்து திராவிடம் என்பதை எடுத்து கொண்டதாக கால்டுவேல்-லே கூறியுள்ளார் 

பஞ்ச திராவிடர் என்று மாநாடே நடத்துகிறார்கள் பிராமணர்கள்.மாநாடு போடும்போது திராவிட இனமே என்று அழையுங்கள் , கி.வீரமண போன்றவர்கள் தங்களை திராவிடத் தலைவர் என்று சொல்லுங்கள்.  சங்கரய்யாவுக்கு ஏன் திராவிட தகை சால் விருது கொடுக்காமல் தமிழ் தகைசால் விருது கொடுக்கிறார்கள். 

சட்டமன்றத்தில் கூறுவதை வெறும் அறிவிப்பு என்று மட்டுமே பார்க்கிறோம். கடன் உதவி என்கிறார்கள்.. கடன் எப்படி உதவியாகும்? அதற்குதான் வட்டி வாங்குகிறார்களே.  

குடிசை மாற்று வாரியம் பெயரை மாற்றுகிறார்கள். புதிய பெயரில்  வாரியம் என்ற வார்த்தை மட்டும் மாறாமல் இருக்கிறது , அப்போதான் 'வாற முடியும்'. விலையில்லா மடிக்கணினி , ஆடு , மாடு  வாங்க செலவிடும் காசு யாருடையது? 

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவதற்கான திட்டம் இருக்கிறது. கடந்த முறை 12 விழுக்காடு வாக்கு பெற்றோம். இம்முறை அதைக்காட்டிலும் அதிகம் பெறுவோம். 

39 கோடிக்கு கருணாநிதி நினைவிடம் யார் பணத்தில் கட்டுகிறார்கள். ஆனால்  5 கோடிக்கு ஈழத் தமிழர்களுக்கு வீடு ,  6 கோடியில் தென்னை மரத்திற்கு உதவுவோம் என்கிறார்கள். 

அயோத்திதாசருக்கு மணிமண்டபம் கட்டப்போகிறார்களாம். அவரது நினைவிடத்தை  முதன் முதலில் தேடிக் கண்டுபிடித்தது நான்தான். மாலையுடன் அவரது சிலையின் ஏணியில் ஏறினேன். ஏணி விழுந்துவிடும் என காவல்துறையினர் பதறினர்.  அதிகாரத்திற்கு வந்த பிறகே மாலை இடுவேன் என கோபத்தில் வந்துவிட்டேன்.

பெரியாருக்கு 100 கோடியில் சிலை வைக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பெரியார் யார்..? பெயர் வைக்க, வீட்டில் சாப்பாடு போட, திருமணத்தில் கலந்து கொள்ளக் கூட காசு வாங்குபவர். தன் மீது வீசப்பட்ட செருப்புகளை சேர்த்து வைத்து ஜோடி அரை அணா என்று விற்று பள்ளி கல்லூரிகளை உருவாக்கினார். அது இப்போது யாராரிடமோ கைமாறி விட்டது. குஜராத்தில் 3ஆயிரம் கோடியில் வைக்கப்பட்ட படேல் சிலைக்கும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கும் என்ன மாறுபாடு இருக்கிறது. தமிழகத்தில் பெரியாருக்கு சிலை தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. மேலும் சிலை வைப்பது பெருமைக்கு எருமை மேய்க்கும் செயல். பெரியாரே இதை விரும்பியிருக்க மாட்டார். விரட்டி விரட்டி கம்பால் அடித்திருப்பார். 

வேளாண் உறுதியளிப்பு திட்டம் என்பதே நாசகர திட்டம்தான். 100 நாள் பணியாளர்கள்  சீட்டாடி , பல்லாங்குழி விளையாடி வருகின்றனர். இதன் மூலம் சீரமைத்த சாலை, நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை என்ன..? 100 நாளே நாசமாக்கிய நிலையில் 150 நாளாக அறிவிக்கிறார்கள். 

கியூ பிராஞ்ச் மூலம் உருவாக்கப்பட்டதே ஈழத் தமிழர் சிறப்பு முகாம்கள், க்யூ பிராஞ்ச்காரர்கள் முகாமில் கூலி வேலை பார்ப்பவர்களிடம் கூட காசு பிடுங்கி, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தருகின்றனர். இதை எல்லாம் மாற்ற காலம் வரட்டும் என காத்திருக்கின்றனர். 

என் பேச்சை நகைச்சுவையாக எடுத்து கொள்வேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.  சீரியசாக எடுத்திருந்தால் எப்போதோ திருந்தியிருப்பார்கள். பைத்தியக்காரர்கள்தான் சிரித்து கொண்டே இருப்பார்கள்" என்று கூறினார்.