அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்..!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு ரயில் மூலம் 4,000 டன் நிலக்கரி வந்துள்ளதால், 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி தொடங்கியது.

அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்..!



தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. மிகவும் பழமையான இந்த எந்திரங்கள் அவ்வப்போது பழுது ஏற்பட்டு வந்தது. சமீபகாலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுவீச்சில் மின்சார உற்பத்தி நடந்து வந்தது. இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சார உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நேற்று 4 யூனிட்டுகள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் மூலம் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு ரயில் மூலம் 4 ஆயிரம் டன் நிலக்கரி தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து இன்று
காலை 1 மற்றும் 4 யூனிட்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2, 3, 5வது யூனிட்கள் தொடர்ந்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தற்போது 4,000 டன் நிலக்கரி தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு ரயில் மூலம் வருகைதந்ததை தொடர்ந்து தற்போது  8,000 டன் நிலக்கரி இருப்பு உள்ளதாக தலைமை பொறியாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.