கணவர் வீட்டு முன் கைக்குழந்தையுடன் அமர்ந்து பெண் தர்ணா போராட்டம்...!

செங்கல்பட்டில் கணவர் வீட்டு முன் கைக்குழந்தையுடன் அமர்ந்து பெண் தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

கணவர் வீட்டு முன் கைக்குழந்தையுடன் அமர்ந்து பெண் தர்ணா போராட்டம்...!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர். காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகளான பிரீத்தி (33) என்பவருக்கும் செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான தீனதயாளன் (39) என்பவருக்கும், இருவீட்டார் சம்மதத்தின் பேரில் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் இவர்களுக்கு 2-வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து தீனதயாளன் விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ப்ரீத்தி தனது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து உள்ளார். ஆனால் தீனதயாளன் அவரை ஏற்க மறுத்து ப்ரீத்தியை கடந்த 10-நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளார். இது குறித்து பிரீத்தியின் பெற்றோர் பலமுறை தீனதயாளன் மற்றும் அவரது பெற்றோர்களிடம் பேசி உள்ளனர். ஆனால் அவர்கள் ப்ரீத்தியை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று அனுமந்தபுத்தேரியில் உள்ள தனது கணவன் வீட்டிற்கு வந்த ப்ரீத்தி, தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் தீனதயாளன் அவரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் தனது இரண்டு வயது கைக்குழந்தையுடன் கணவர் தீனதயாளன் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.