மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் வழிபாடு!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் நினைவிடத்தில், மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது வாரிசுதாரர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள் மாமன்னர்கள் மருது சகோதரர்கள். ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய இவ்விருவரும் ஆங்கிலேயரால் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். 

இவர்களின் 222-வது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படடுகிறது. நினைவு தினத்தை முன்னிட்டு மருது பாண்டியர்களின் வாரிசுதாரர்கள் நினைவு மண்டபத்தின் முன்புறத்தில் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து சர்க்கரை பொங்கலை அவர்களது திருவுருவ சிலையின் அருகே படையல் இட்டு, தீப தூப ஆராதனை செய்து வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வாரிசுதாரர் ராமசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அவரது நினைவு மண்டபம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியேற்றி வைத்து அரசு விழாவை துவக்கி வைக்க உள்ளார். தொடர்ந்து நினைவு மண்டபம் மற்றும் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைந்துள்ள நினைவுத்தூண் பகுதிக்கு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய அமைப்புகள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தர உள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com