தயார் நிலையில் 24 மணிநேர காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு!

Published on

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 55 படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு மருத்துவமனை முதல்வர் திருநாவுக்கரசு தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக  குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தவிர தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து அரசு மருத்துவமனைகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 வார்டுகளில் 55 படுக்கை வசதிகளுடன் கூடிய 24 மணிநேர காய்ச்சல் சிகிச்சைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனியாக படுக்கை வசதிகள் கொண்ட வார்டு தொடங்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் திருநாவுக்கரசு கூறியதாவது, தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்ற மாவட்டங்களை விட குறைவாகவே காணப்படுகிறது. 

இருப்பினும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சைப்பிரிவில் கொசுவலையுடன் கூடிய 55 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இதில் டெங்கு காய்ச்சலுக்கு பெரியவர்களுக்கு 20 படுக்கைகள் குழந்தைகளுக்கு இருபது படுக்கைகள் கொண்ட வார்டும், நிபா வைரஸ் சிகிச்சைக்கு 15 படுக்கையுடன் கூடிய வார்டும்ம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்து மாத்திரைகள் போதுமான அளவில் இருப்பில் உள்ளது. எனவே காய்ச்சல் அறிகுறி உள்ள பொதுமக்கள் எந்த நேரமாக இருந்தாலும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காய்ச்சல் சிகிச்சைப்பிரிவில் உடல் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதே போல நிபா வைரஸ் தாக்குதலால் தேனி மாவட்டத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com