துருக்கியில் இருந்து வந்த குழந்தை; மேல் சிகிச்சைக்கு அனுமதி!

Published on
Updated on
1 min read

துருக்கி நாட்டில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தமிழகம் வந்தடைந்த குழந்தையை தமிழக அரசு சார்பில் வரவேற்று தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

​கடந்த 7 ஆம் தேதி அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் தனது 3 வயது பெண் குழந்தையுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துக்கொண்டிருந்து போது நடுவானில் அவரது 3 வயது பெண் குழந்தை சந்தியாவிற்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவசரமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் விமானம் தரையிறக்கப்பட்டது.

அங்கு இஸ்தான்புல் மெடிக்கானா மருத்துவமனையில் குழந்தை சந்தியா அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவசர மற்றும் தீவிர சிகிச்சையின் பொருட்டு அவர்களின் மொத்த கையிருப்பு பணமும் செலவழிந்த நிலையில் மேல் சிகிச்சை செய்திட தமிழ்நாடு கொண்டு வர மருத்துவரிடம் ஆலோசனை பெறப்பட்ட நிலையில் குழந்தை சந்தியாவிற்கு கடுமையான சுவாச பிரச்சனை இருப்பதால், மருத்துவ குழுவின் கண்காணிப்பில், சுவாச கருவிகளுடன் விமானத்தில் பயணம் மேற்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

​இஸ்தான்புல் நகரிலிருந்து மேற்காணும் மருத்துவ வசதிகளுடன் குழந்தை சந்தியாவை தமிழ்நாடு அழைத்து வர  முதலமைச்சர் அவர்களிடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை ஏற்ற  முதலமைச்சர், சந்தியாவினை மேல்சிகிச்சைக்கு சென்னைக்கு அழைத்து வர ரூபாய் 10 இலட்சம் அளித்து உத்திரவிட்டார். குழந்தையை தாயகம் அழைத்து வர வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் மும்பையிலிருந்து சென்னை சென்ட்ரல் வந்தடைந்த குழந்தையை  சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். இதன் பின்னர் குழந்தையை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை தமிழக முதல்வர் நிதி உதவி அளித்து தாயகம் அழைத்து வந்ததாக தெரிவித்தார். பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உதவியதற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்ததாக கூறினார். குழந்தையின் உடல் நிலையை கருத்தில் கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட உள்ளதாக தெரிவித்தார். குழந்தைக்கு சிகிச்சைக்கு தேவையானவற்றை முதல்வர் செய்வார் என பெற்றோர்களும், முதல்வரும் நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com