ஏழைகளின் வாழ்வில் ஏற்றத்தையும், எதிர்கால இந்தியாவின் மாற்றத்தையும் உறுதி செய்த உன்னத பட்ஜெட் !!!

ஏழைகளின் வாழ்வில் ஏற்றத்தையும், எதிர்கால இந்தியாவின் மாற்றத்தையும் உறுதி செய்த உன்னத பட்ஜெட் !!!

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் நிறுவனர் தேவநாதன் யாதவ் அறிக்கை

பட்ஜெட் 2023

பாரத பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தனி  நபருக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 7 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும். குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் அழிவை நோக்கி சென்ற விவசாயத்துறையை மீட்டெடுத்து பல நல்ல திட்டங்களை தொடர்ந்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளேன். மேலும் இந்த பட்ஜெட்டில்  விவசாயத்துறையில் மேலும் மகுடமாய் விஞ்ஞானத்தை ஊக்குவிக்கவும் தனியார் பங்களிப்பை அதிகரிக்கவும் சிறப்பு நிதியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளின் மீதான அக்கறையை மேலும் நிலைநாட்டியுள்ளது.

விவசாயத்துறையை ஊக்குவிக்க வேளாண்துறை மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது விவசாயிகளுக்கு நிம்மதி பெருமூச்சியை தந்திருக்கும். பள்ளி குழந்தைகளின் அறிவை பெருக்கும் வகையில் டிஜிட்டல் நூலகங்களை அமைக்க முன் வந்திருப்பதும் அதிலும் குறிப்பாக மாநில மொழிகளில் அமைக்கப்படும் என அறிவித்திருப்பது மாணவர்களின் வாழ்வை நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சிறப்பாக்க உதவிடும். சாலை போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி, ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடியும் ஒதுக்கி பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான கட்டமைப்பை வளர்த்திடும். மேலும் அடிப்படை கட்டமைப்புகளுக்காக மட்டும் 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி நவீன இந்தியாவிற்கான அடித்தளமிட்டுள்ளது இந்த பட்ஜெட். பட்டியலின/ பழங்குடியின மாணவர்களின் கல்வியை வளப்படுத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது, நவீனமயமான இந்தியாவை கட்டமைப்பது உள்ளிட்ட அனைத்தும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட் மக்களின் மனங்களை கவரும் பட்ஜெட்டாகவும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் பட்ஜெட்டாகவும் அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ஏழைகளின் வாழ்வில் ஏற்றத்தையும், எதிர்கால இந்தியாவின் மாற்றத்தையும் இந்த பட்ஜெட் உறுதி செய்துள்ளதுடன் அனைத்து தரப்பினரின் தேவைகளையும் முழுமைப்படுத்திய உன்னத பட்ஜெட்டிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்…

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com