ஆயுதபூஜை பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை... கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்...

ஆயுதபூஜை பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டியதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
ஆயுதபூஜை பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை... கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்...

கல்வி, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்கு சென்னையில் வசித்து வரும் வெளியூர்வாசிகள், பண்டிகை காலங்களின்போது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அந்தவகையில் இன்று ஆயுத பூஜையும், நாளை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. வரும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால், 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

இதனையொட்டி சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள், சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். விடிந்தால் பண்டிகை என்ற நிலையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் வசதிக்காக சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன.

இதைப்போல கோவை மாவட்டத்தில் இருந்தும் வெளியூர்களுக்கு 260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆயுதபூஜை பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை என்பதால், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து ஏராளமான மக்கள், தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து சென்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com