புதுக்கோட்டையில் நடைபெற்ற பிரகதாம்பாள் கோயில் தேரோட்டத்தின் போது, தேர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தேர் திருவிழா:
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை கோகர்னேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி திருவிழாவானது கடந்த 9 நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினசரி சிறப்பு பூஜைகளுடன் அம்மனின் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில், இன்று தேரோட்டம் தொடங்கியது.
விபத்துக்குள்ளான தேர்:
கடந்த 9 நாட்களுக்கு மேல் நடைபெற்ற கோவில் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர் ஊர்வலம் இன்று நடைபெற்றது. அப்போது ஊர்வலத்திற்காக தேரை எடுத்த போது, தேர் இரண்டு அடி எடுத்து வைக்குமுன்னரே, திடீரென ஒரு பக்கமாக சாய்ந்து பக்தர்கள் மீது விழுந்தது. இதில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணை:
முதற்கட்ட விசாரணையில், தேர் கிளம்பும் போது தயார் நிலையை காண்பிக்க வழக்கம் போல் காண்பிக்கப்படும் வெள்ளைக்கொடி காட்டப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் திடீரென தேரை இழுத்ததால் தேர் நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது தேரில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட வேண்டிய கிளாம்புகள் பொருத்தப்படவில்லை என்றும், இதுகுறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பக்தர்கள் தெரிவித்தும் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விஜயபாஸ்கர் ஆய்வு:
இந்நிலையில் தேர் விழுந்து விபத்துகுள்ளான தகவல் அறிந்து விரைந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தேர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். அதே போன்று, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த வண்ணம் உள்ளனர்.