சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தலைமைக் காவலரின் 10 வயது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காவலர் தன் மகளுக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை குறித்து நடத்திய போராட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலக வாயிலில் காவலர் தனது குழந்தையுடன் வந்து போராட்டம் நடத்தியதாகவும், அந்த குழந்தை 3 வயதில் இருந்து பிறவி நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் தான் சிகிச்சை பெறப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க : விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராகும் சைலேந்திரபாபு?
மேலும், அதிமுக ஆட்சியில் ஜனாதிபதி வரை மனு கொடுத்திருப்பதாக கூறிய அவர், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காவலரின் கோரிக்கையாக உள்ளதாகவும், தகவல் அறிந்த உடனேயே அவரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், திமுக ஆட்சியிலாவது நடவடிக்கை இருக்குமா என்பதற்காக தான் போராட்டம் நடத்தியதாக கூறியதாகவும் தெரிவித்தார்.
இதுக்குறித்து குழு அமைத்து மூன்று மருத்துவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறிய அவர், விரைவில் விசாரணை அறிக்கை பெற்ற பின் மருத்துவர்கள் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.