” நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு” - திருமாவளவன் சாடல்.

” நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு”  - திருமாவளவன் சாடல்.

பொதுவாக சினிமாவில் இருந்து  வரும் நபர்கள் சினிமா மூலம் கிடைத்த பிரபலம் இருந்தால் போதும் முதல்வர் ஆகி விடலாம் என நினைக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் தான் இந்த சாபக்கேடு உள்ளது, என விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து , ஆளுநர் ஆர்.என் ரவியை அகற்றக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கையெழுத்தை பெறுவதற்காக சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்திற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று வருகை தந்து திருமாவளவன் மற்றும் விசிக நிர்வாகிகள் கையெழுத்தை படிவத்தில் பெற்றுக் கொண்டார்

பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து  பேசுகையில்:- 

நடிகர் விஜய்யின் சமீபத்திய பேச்சுக்கள் அவர் அரசியல் வருகைக்கான அறிகுறியா? என்ற கேள்விக்கு,

விஜய் அரசியலுக்கு வரட்டும் அதனால் ஒன்றுமில்லை. நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அம்பேத்கர் பெரியார் போன்ற தலைவர் பற்றி படிக்க வேண்டும் என கூறி உள்ளார் அதனை வரவேற்பதாகவும், கோல்வாக்கரை படியுங்கள் சாவர்க்கரை படியுங்கள் என்று சொல்லாமல் அம்பேத்கரை படியுங்கள் என்று விஜய் கூறியதில் மகிழ்ச்சி என்றும் கூறினார். மேலும், அவர் பொது வாழ்வுக்கு எப்போது வேண்டும் என்றாலும் வரலாம், ஆனால், மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வர வேண்டும் என்றார். 

பொதுவாக,  சினிமாவில் இருந்து  வரும் நபர்கள் சினிமா மூலம் கிடைத்த பிரபலம் இருந்தால் போதும் முதல்வர் ஆகி விடலாம் என நினைப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் தான் இந்த சாபக்கேடு உள்ளது என்றும்
மக்களுக்கு பணியாற்றி சிறைக்கு சென்றவர்கள்; தியாகம் செய்தவர்கள் என அனைவரையும் ஓரம் கட்டி ஹைஜாக் பணி விடலாம், சினிமா மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து மக்களை ஹைஜாக் செய்துவிடலாம் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது என வேதனையுடன் தெரிவித்தார். 

மேலும், ”இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்திலும் சினிமாவில் உள்ள நபர்கள் அவரவர்கள் தங்கள் வேலையை பார்க்கின்றனர்;  கடைசி காலகட்டத்தில் சினிமா நடிகர்கள் ஆட்சிக்கு வரலாம் என்று அவர்கள் கணக்கு போடுவதில்லை; கேரளாவில் மம்முட்டி, கர்நாடகாவில் ராஜ்குமார், தேசிய அளவில் பிரபலமான அமிதாப்பச்சன் என பலர் இதனை செய்யவில்லை” என்றும் எம்ஜிஆர்.,  என்டிஆர். போன்றோர் தான் அதில் விதிவிலக்கு. ஆனால், அதே அடிப்படையில் அனைவரும் வந்துவிட முடியாது அது மாதிரி தமிழகத்தில் வந்தவர்கள் எல்லாம் பின்னுக்கு சென்று விட்டனர் என கருத்து தெரிவித்தார்.

தமிழகத்தில் மட்டும் தான் எல்லா வேலையும் முடிந்து சினிமாவில் மார்கெட் போகும் நேரத்தில் அரசியலுக்கு வரலாம்;  வந்து மக்களை கவர்ந்து விடலாம் என நினைக்கின்றனர். அதுபோல இல்லாமல் முற்போக்கான கருத்தியல் சார்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். அதுதான் தமிழகத்தின் தேவையாக உள்ளது என்றும் கூறினார்.

இதற்கு முன்பு திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த அனைவருக்குமே இது பொருந்துமா என்ற கேள்விக்கு :- 

அனைவருக்குமே இது பொருந்தும், திரைத்துறையில் இருப்பவர்கள் இதுவரை சம்பாதித்து விட்டோம் இனி ஆட்சியில் உட்காரலாம் என்று கணக்கு போட்டு அரசியலுக்கு வருகிறார்கள் என்று பதிலளித்தார்.

மணிப்பூரில் அவ்வளவு கலவரம் நடந்து கொண்டிருக்கிருக்கும் சமயத்தில், விஜய் பற்றி கேட்பதே மக்களுக்கு எதிரானது தான் என்றும்,  ஊடகங்கள் தான் இது போன்ற விஷயங்களை மிகைப்படுத்துகிறது என்றார்.

விஜய் அரசியலுக்கு வருவார் என்று பல கட்சிகள் பதற்றம் அடைகிறதா ? என்ற கேள்விக்கு 

யாருக்கும் பதற்றம் இல்லை ஊடகங்கள் தான் இதுபோன்று பதற்றம் ஆக்குகின்றன என்றும், ”எந்த மாநிலத்திலும் சினிமா பிரபலங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை;  ஊடகத்தினர் தான் இது போன்று மிகைப்படுத்துகிறீர்கள் அவர் அரசியலுக்கு வந்த பிறகு இதை எல்லாம் கேளுங்கள்” எனக் குறிப்பிட்டு, ஊடகங்களுக்கு சமூக அரசியல் பார்வை வேண்டும் என்றும், இதுபோன்று பொருப்பற்று எந்த கேள்விகளையும் கேட்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினார் .

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com