மின்கட்டண உயர்வு விவகாரம்...விசாரணையில் உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன...!

மின்கட்டண உயர்வு விவகாரம்...விசாரணையில் உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன...!

மின் கட்டண உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வு:

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்சாரக்கட்டணத்தை உயர்த்தியது. அதன்படி புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்தது.

தமிழ்நாடு நூற்பாலை சங்கங்கள் சார்பில் வழக்கு:

புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்ததையடுத்து, தமிழகத்தில் மின் கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலை சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனிநபர் அமர்வு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டதற்கு பிறகுதான் மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும், அதுவரை மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க கூடாது என உத்தரவிட்டிருந்தது.

தனிநீதிபதி உத்தரவுக்கு தடை:

இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில் மீண்டும் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, மின் கட்டண உயர்வு தொடர்பான தமிழக அரசாணை செல்லும் என பல்வேறு கோரிக்கைகள் கொண்ட உத்தரவை கடந்த மாதம் பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு:

இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத்தின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,” மின் கட்டண உயர்வு விவகாரத்தில் தீர விசாரித்து தான் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இரு நீதிபதிகள் அமர்வு அதனை முழுமையாக ஆய்வு செய்யாமல் தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்துள்ளது. அதனால் அதற்கு தடை விதித்து நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று விசாரணை:

இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜெ.கே. மகேஷ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com