ஆருத்ரா நிதி நிறுவன முகவரின் கைங்கரியத்தால்,... நடுத்தெருவில் நிற்கும் மூத்த தம்பதி...!

25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை, வெறும் 6 லட்சம் ரூபாய்க்கு வாங்கி மோசடி...!
ஆருத்ரா நிதி நிறுவன முகவரின் கைங்கரியத்தால்,... நடுத்தெருவில் நிற்கும் மூத்த தம்பதி...!

காஞ்சிபுரம் அருகே மூத்த தம்பதியை ஏமாற்றி, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை, வெறும் 6 லட்சம் ரூபாயை கொடுத்து எழுதி வாங்கியுள்ளார், ஆருத்ரா நிதி நிறுவன முகவர் ஒருவர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஜிம் நகரில் வசிப்பவர்கள் ஸ்டீபன்-சுகுணா தேவி தம்பதி. இவர்களுக்கு சொந்தமாக 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு மற்றும் நிலம் உள்ளது. 

இந்த நிலையில், ஆருத்ரா நிதி நிறுவனத்தின் முகவராக செயல்பட்டு வந்த நாகராஜன் என்பவர், ஸ்டீபன் மற்றும் சுகுணாதேவி தம்பதியிடம் பேசி, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அவர்களின் வீட்டை, 26 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார். 

மேலும், அதில் 6 லட்சம் ருபாய்யை ஸ்டீபன்-சுகுணா தம்பதியிடம் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 20 லட்சம் ரூபாயை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து விடுவதாகவும், அதன் மூலம் பல லட்சம் ரூபாய் வருமானம் வரும் என்று கூறியுள்ளார். இவரின் வார்த்தையை நம்பி இதற்கு ஒத்துக் கொண்டுள்ளனர், மூத்த தம்பதியர். இந்நிலையில், பல்வேறு முறைகேடுகளில் சிக்கிய ஆருத்ரா நிதி நிறுவனம் மூடப்பட்டு, அதன் முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாகராஜனும் கைது செய்யப்பட்டார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த மூத்த தம்பதி, அதே வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே, தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள ஆருத்ரா முகவர் நாகராஜன், அடியாட்களுடன் சென்று, ஸ்டீபன்-சுகுணா தேவி தம்பதியை, வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து வெளியில் வைத்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனால் அந்த மூத்த தம்பதி, நடுத்தெருவில் தவித்து வருகின்றனர். 

இதையடுத்து,  தம்பதி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நாகராஜன்,  காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில், இதே போன்று அப்பாவி மக்களை ஏமாற்றி, சொத்துக்களை கைப்பறியதுடன், சுமார் 500 கோடி ரூபாய் வரை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

இது போன்று, ஏராளமான சொத்துக்களை குவித்துள்ள நாகராஜன், பினாமி பெயரில் அவற்றை வாங்கி குவித்துள்ளதால், சொத்துக்களை முடக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். 

இந்த தம்பதி, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, தற்போது வீட்டையும் இழந்து, பணமும் இன்றி, தற்போது வசிப்பதற்கும் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். இந்த மூத்த தம்பதியர். இவர்களைப் போல் இன்னும் எத்தனை பேர் நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கிறார்களோ...?

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com