மாநகராட்சி உடற்பயிற்சி கூடங்களுக்கு கட்டணம் வசூல்; அதிமுக கவுன்சிலர்கள் புகார்!

மாநகராட்சி  உடற்பயிற்சி கூடங்களுக்கு கட்டணம் வசூல்; அதிமுக கவுன்சிலர்கள் புகார்!

கோவை மாநகராட்சி நடத்தும் உடற்பயிற்சி கூடங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்துள்னர். 

இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் விக்டோரியா ஹாலில் மாமன்ற கூட்டம் நடைபெறுகிறது. மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். 

முன்னதாக இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநகராட்சி பகுதிகளில் துவக்கப்பட்ட இலவச மாநகராட்சி உடற்பயிற்சி கூடங்களுக்கு தற்பொழுது உள்ள திமுக அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்தனர். 

இது குறித்து பேசிய அவர்கள், அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநகராட்சி பகுதிகளில் இலவச உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டதாகவும், தற்பொழுது தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கின்ற அந்த இலவச உடற்பயிற்சி கூடங்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்தனர். ஏற்கனவே பல்வேறு விஷயங்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இதற்கும் கட்டணம் நிர்ணயித்துள்ளதாகவும்  இளைஞர்களை ஊக்குவிக்கும் அரசு என்று கூறிக்கொள்ளும் திமுகவினர் இவ்வாறு செய்யலாமா? என கேள்வி எழுப்பினர்.  மேலும் இதற்கு கண்டனங்களை தெரிவிப்பதாகவும் கூறினர். 

அண்மையில் கோவையில் பரபரப்பை உண்டாக்கிய மேயரின் குடும்பத்தினர் செய்த செயல் குறித்து பேசிய அவர்கள், அச்செயல் மிகவும் அருவருக்கத்தக்க செயல் எனவும் வெட்கக்கேடான செயல் எனவும் இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல் எனவும் தெரிவித்தனர். மேலும் மேயருக்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோடிக்கணக்கில் செலவு செய்து அரசு குடியிருப்பு ஒதுக்கி இருக்கும் பொழுது ஏன் மேயர் அங்கு குடியிருக்கின்றார் என்று தெரியவில்லை எனவும் மக்கள் வரி பணம் என்றால் எப்படி வேணாலும் வீணாக்கலாமா? என கேள்வி எழுப்பினர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com