நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டை தடுக்க வேண்டும்-விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டை தடுக்க வேண்டும்-விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நேரடி நெல் கொள்முதலில் மோசடி

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திரு சாமி.நடராஜன், தற்போது முன்கூட்டியே காவிரி நீர் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. இதற்காக கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதுடன் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் விவசாயிகளிடம் வசூலிக்கும் முறைகேடு உள்ளிட்ட தவறுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பராமரிப்பு பணிகள்

மேலும் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை வயல்களுக்கு சென்று கொள்முதல் செய்யும் நடமாடும் கொள்முதல் நிலையங்களை தமிழ்நாடு அரசு துவக்க வேண்டும், தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் 17 சதவீத ஈரப்பதற்கும் அதிகமான 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு அணையின் மதகு உடைந்ததால் தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது தமிழ்நாடு அரசை இவற்றை தடுக்க முன்கூட்டியே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சட்டவிரோத செயலில் ஈடுபடும் ஓ. என்.ஜி.சி

டெல்டா பகுதிகளில் ஏற்கனவே மூடப்பட்ட எண்ணெய் கிணறுகளை பராமரிப்பு என்ற பெயரில் ஓ. என்.ஜி.சி நிறுவனம் புதுப்பித்து நவீன முறையில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பது சட்டவிரோதமானது. இதனை கண்காணிக்க குழு அமைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்து மீறி ஓ என்ஜிசி நிறுவனம் செயல் பட்டால்  தமிழக விவசாய சங்கம் நேரடியாக களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடும் என்று தெரிவித்தார்.