முன்னாள் ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்களின் அன்பு பரிசு!!

முன்னாள் ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்களின் அன்பு பரிசு!!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை பரிசாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சந்திக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழொளி(54). இவர்   தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக 6 ஆண்டுகள் பணியாற்றி கடந்த மாதம்  ஓய்வுபெற்றார்.  பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது அந்தப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் வாய்மேடு கிராமத்தில் 1989ஆம் ஆண்டு முதல் 2017 வரை இப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தனி பயிற்சி மையம் துவங்கி 28 ஆண்டுகள் நடத்தினார். தன்னிடம் பயின்ற மாணவர்களிடம் பணத்தை பொருட்டாக மதிக்காமல் கல்வியை  சேவையாக பயிற்சி அளித்துள்ளார்.

இதில் படித்தவர்கள் வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் , மருத்துவர், ஆசிரியர், செவிலியர், வேளாண்மை துறை அதிகாரிகள், பொறியாளர் என 200க்கும் மேற்பட்டவர்கள் அரசு பணியில் பணியாற்றி வருகின்றனர். 100க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர், பலர் தனியார் நிறுவனங்களில் உயர் பதவில் உள்ளனர். ஒரு சிலர் விமானியாகவும், கப்பல் மாலுமியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இவரிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள்  அனைவரும் இணைந்து ஆசிரியர் தமிழொளிக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமென ஒன்று கூடி முடிவு செய்து விழா ஏற்பாடுகளை செய்தனர். அழைப்பிதழ் அச்சிட்டு வெளி மாவட்டங்களில் பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் உள்ளுர்காரர்களுக்கும் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாராட்டுவிழா நடைபெற்றது.

முன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து ஆசிரியர் தமிழொளிக்கு 10 லட்சம் மதிப்புடைய ஷிப்ட் டிசையர் காரை வாங்கி கொண்டு வந்து விழா மேடை அருகே நிறுத்தி ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ்  காரின் சாவியை பரிசாக தமிழொளிக்கு வழங்கினார்.பின்பு தமிழொளி ஆசிரியரியருக்கு சிறப்பு மலர் புத்தகம் வெளியிட்டனர்.

இதையும் படிக்க || "திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபட்டு வருகின்றனர்" செல்லூர் கே.ராஜு பேச்சு!