அடுத்த கைது டி ஆர் பாலு? : பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமர் பிரசாத் ரெட்டி பேச்சு!

அடுத்த கைது டி ஆர் பாலு? : பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமர் பிரசாத் ரெட்டி பேச்சு!

சென்னை: பாஜகவின் சாதனை விளக்க பொது கூட்டத்தில் பேசிய குஷ்பு மற்றும் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக வை விமர்சித்து பேசியுள்ளனர்.

பாஜக வின் 9 ஆண்டு கால  சாதனை விளக்க பொதுக்கூட்டம், வடசென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமர்பிரசாத் ரெட்டி மற்றும் குஷ்பு பாஜகவின் சாதனைகளைப் பற்றி பேசினார்கள்.

மேடையில், அமர் பிரசாத் ரெட்டி பேசும் பொழுது, சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொல்லும் ஸ்டாலின், எங்களைத் தொட்டால் இந்தியாவில் எங்கேயும் இருக்க முடியாது என்று சொல்லும் உதயநிதி, மற்ற திமுகவினர் எல்லாம் போலீசாரைக் கண்டால் மட்டும் பயந்துவிடுகிறாரகள் என கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜி அதிமுகவில் இருக்கும் பொழுது, அவரை ஊழல்வாதி, கடத்தல் காரன், கொலைகாரன் என பேசிய தற்போதைய முதல்வர், அவர் பேசியதை எல்லாம் மறந்துவிட்டாரா என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், அண்ணாமலை மீது வழக்கு தொடுத்த டிஆர் பாலு தான் அடுத்து சிறை செல்வார் எனவும் பேசியுள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில், இங்கே பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றால், வடசென்னையை சிங்கப்பூர் போன்று மாற்றுவோம் என பேசி முடித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய குஷ்பு, செந்தில் பாலாஜியின் நடிப்பிற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனே தோற்றுவிடுவார். இவ்வளவு நாளாக இதயத்தில் வராத பிரச்சனை, இப்போ மட்டும் எப்படி வந்தது என கேட்டுள்ளார்.

மேலும், ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து, காவேரி செல்ல முற்பட்ட செந்தில் பாலாஜி மூலம், ஓமந்தூராரில் மருத்துவம் சரியில்லை என்பதை அரசே ஒத்துக்கொள்கிறதா? எனவும் காவேரி மருத்துவமனைக்கு சென்றால் தங்களுக்கு வேண்டப்பட்ட மருத்துவர்கள் மூலம் மருத்துவ அறிக்கையை மாற்றி கொள்ளதான் இவ்வாறா? எனவும் கேட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்த்தவர்கள் எல்லாம், அவர் மீது அக்கரையில் சென்று பார்க்கவில்லை. அவர் மற்ற ஊழல் அமைச்சர்களின் பெயரைக் கூறி விட கூடாது என பயந்து சென்று பார்த்து வருகின்றனர், என கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு 

அமைச்சரின் உயிரை காப்பற்ற வேண்டுமென அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முதல்வர் இதே போன்று சராசரி மக்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டாலும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்பாரா? என்றும் இதன் மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரிஇல்லை என்பதை தமிழக முதல்வர் ஒப்பு கொள்கிறாரா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், அமலாக்கத்துறையின் இன்றைய நடவடிக்கைகள் பழிவாங்கும் செயல் என்றால் 2011ஆம் ஆண்டு 2ஜீ வழக்கில் முதல்வரின் தாயாரை அமலாக்கதுறையினர் விசாரிக்கும் போது அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பழிவாங்கும் செயலாக தெரியவில்லையா என்றும் அப்போது மௌனம் காத்தது ஏன் எனவும் கூறியுள்ளார்.