டீசண்ட்னு நினைச்சிங்களா...வேட்டிய மடிச்சு கட்டுனா நாங்களும்...ஆவேசமாக பேசிய அன்புமணி!

டீசண்ட்னு நினைச்சிங்களா...வேட்டிய மடிச்சு கட்டுனா நாங்களும்...ஆவேசமாக பேசிய அன்புமணி!
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் வேட்டியை மடித்து கட்டி அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

பொதுக்கூட்டம் :

குறிஞ்சிப்பாடியில் பாமக சார்பில் நீர், நிலம், விவசாயம் காப்போம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், என்.எல்.சி நிறுவனம் அதன் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு முடிவு செய்திருப்பது வேளாண்மையையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்பதால், என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக பாமக போராட்டம் நடத்துவதாக கூறினார். 

மேலும் என்.எல்சி. சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையக்கூடியவை, ஆண்டுக்கு 10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரக் கூடியவற்றை எப்படி விவசாயிகள் விட்டுத்தருவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

பணி நியமன ஆணை வழங்கியதாக செய்தி :

ஆனால், கடந்த வாரம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் என்.எல்.சி.க்கு பொதுமக்கள் தாங்களாக முன்வந்து நிலம் வழங்கியதாகவும், அவ்வாறு நிலம் வழங்கியவர்களில் 10 பேருக்கு என்.எல்.சி.பணி நியமன ஆணையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உழவர்களின் நலனுக்காக பாடுபடுவதாக உறுதியேற்றுக் கொண்ட வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில்
ஈடுபடாமல் விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் நிலங்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்று குற்றம் சாட்டினார்.

முதலமைச்சர் நல்ல தீர்வு கொடுக்க வேண்டும் :

தொடர்ந்து, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் பணமாக்குதல் திட்டத்தின் கீழ் என்.எல்.சி. நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனியாருக்கு விற்பனை செய்யப்பட விருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் என்.எல்.சி. நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என்று தெரிந்தே, அந்த நிறுவனத்திற்கு உழவர்களின் நிலங்களை பறித்துத் தருவது நியாயமல்ல என்று தெரிவித்த அன்புமணி ராமதாஸ், இந்த பிரச்சனையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு விவசாயிகளுக்கு நல்ல தீர்வினை வழங்குமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வேட்டியை மடிச்சி கட்டுனா :

முன்னதாக, அன்புமணி என்றால் டீசண்ட் என்று நினச்சுட்டு இருக்காங்க...வேட்டியை மடிச்சி கட்டுனா நாங்களும்...என்று ஆவேசமாக பேசிய அன்புமணி இராமதாஸின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com