எல்லா மாவட்டங்களிலும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம்...மக்கள் கூட்டங்களால் நிறைந்த கோவில்கள்!

எல்லா மாவட்டங்களிலும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம்...மக்கள் கூட்டங்களால் நிறைந்த கோவில்கள்!
Published on
Updated on
1 min read

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழா:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் அமைந்துள்ள தாந்தோன்றீஸ்வரர் சுவாமி கோவிலில், தாந்தோன்றீஸ்வரர் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதன் மூலம் உணவு பஞ்சம் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

காய்கறிகள், நவதானியங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற மெய்நின்ற நாதர் கோவில் அமைந்துள்ளது. ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி மெய்நின்ற நாதர் ஆலயத்தில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அரிசிச் சாதம், நவதானியங்கள், காய்கறிகள் மற்றும் கனிகள் கொண்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் பலரும் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய், கனிகள், அரிசி உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கினர். 

16 வகையான திரவியங்களால் அபிஷேகம்:

இதேபோல், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சொக்கலிங்கபுரத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ அழகிய சோழீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அண்ணாபிஷேகத்தில் பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சொக்கலிங்கபுரத்தில் அமைந்துள்ள அழகிய சோழீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில், அழகிய சோழீஸ்வரருக்கு திருமஞ்சனம், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னம், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

காய்கறிகள் கொண்டு சிறப்பு அலங்காரம்: 

திருப்பூர் மாவட்டம் உடுமலை இரத்தின லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி மூலவர், நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. முன்னதாக சந்தனம், பஞ்சாமிர்தம், பால் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு சிவனுக்கு அன்னம் சாத்தப்பட்டு கேரட், பீன்ஸ், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொணடு சாமி தரிசனம் செய்தனர்.                             

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com