ஜெயலலிதா தேர்தலில் தோற்றிருந்தால் 300க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருப்பார்கள்... அன்வர் ராஜா சர்ச்சை பேச்சு...

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா  தோற்றிருந்தால் 300க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருப்பார்கள், ஆனால் தற்போதைய தோல்விக்கு யாரும் தூக்கிட்டு செத்திருக்கிராறா? என்று முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா  சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசினார்.
ஜெயலலிதா தேர்தலில் தோற்றிருந்தால் 300க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருப்பார்கள்... அன்வர் ராஜா சர்ச்சை பேச்சு...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் மஹாலில் அஇஅதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி., அன்வர் ராஜா, மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் எம்பி அன்வர் ராஜா பேசுகையில்...
ஒன்றிய செயலாளர்கள், கழக நிர்வாகிகளை தவிர்த்து கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் எதிர்பார்ப்பது ஜெயலலிதா  பெயரை சொல்கிறார்களா ?.. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரை சொல்கிறார்களா ?.. என்று தான் கவனிப்பார்கள். நீங்கள் அதை சொல்ல மறைத்தால் அவர்கள் உங்களை மறைத்துவிடுவார்கள்.
இந்த தேர்தல் மற்றும் பல இடங்களில் அதுதான் நடந்துள்ளது. ஆனாலும் இத்தேர்தலில் 75 இடங்களில் வெற்றி பெற்று விட்டோம். ஜெயலலிதா இருந்தபோதும் நாம் தோற்று இருக்கிறோம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது 65 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருந்தோம். ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்ற போது 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்து இத்தேர்தலில் 70 இடங்களில் மட்டுமே  வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்திருந்தால் 300க்கும் மேற்பட்ட கட்சியினர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இத்தேர்தலில் தோல்வியுற்று ஆட்சிக்கு வரமுடியவில்லை. இதுகுறித்து யாரும் வருத்தப்படவில்லை, யாரும் தூக்கிட்டு செத்து இருக்கிறாரா ? என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார். 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி ஆற்றில் தண்ணீர் வராது, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் வறட்சி ஏற்படும், குடிநீர் பஞ்சம் ஏற்படும், இது ஒரு உயிர் பிரச்சனை. இதைத் தவிர கர்நாடக அரசு மற்றொரு அணையை சத்தமில்லாமல் கட்டி முடித்து விட்டது. இதனை எல்லாம் தட்டிக் கேட்காமல் பூசி முழுகுகின்ற ஆட்சியை ஸ்டாலின் செய்து வருகிறார். 
மத்திய அரசு மீனவர்களுக்கு எதிராக சட்டத்தை தாக்கல் செய்ய உள்ளது. இதனை தமிழக அரசு எதிர்க்காமல், வேண்டாம் எனக் கூறாமல் சட்டத்தை தாக்கல் செய்யக் கூடாது என ஸ்டாலின் கூறி வருகிறார். திமுகவின் எதிர்ப்பு முனை மழுங்கிப் போய் உள்ளது, ஒன்றிய அரசு எனக் கூறுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், மிகக் கடுமையாக இருந்து மத்திய அரசை கடுமையாக எதிர்க்க வேண்டும் என சீமான் கூறியிருப்பதாக பேட்டி அளித்தார்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com