ஏ.ஆர்.ஆர். இசைநிகழ்ச்சி விவகாரம்: இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு..!

Published on
Updated on
1 min read

ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி விவகாரம் தொடர்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ.சி.டி.சி. நிறுவனம் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 10 ஆம் தேதி 'மறக்குமா நெஞ்சம்' என்ற ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி சென்னையை அடுத்த ஈ.சி.ஆர்.சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது.

நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும் கூறியிருந்தனர்.

மேலும் பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அதோடு கூட்ட நெரிசலில் பலருக்கும் மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.இந்த நிகழ்ச்சி குறித்து பலரும் மோசமான நிகழ்ச்சி ஏற்பாடு எனக் குற்றம் சாட்டினர்.

இதனை அடுத்து தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் இது போன்ற சம்பவம் நடைபெறாத வகையில் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் குளறுபடிக்கான காரணம் குறித்து விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உத்தரவிட்டர்.

இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு:- 

இது குறித்து கானத்தூர் போலீசார் நிகழ்ச்சியை நடத்திய ஏ.சி.டி.சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹேமந்த் உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் விதிகளை மீறி நிகழ்ச்சி நடத்தியது, நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ்  ஏ.சி.டி.சி நிறுவனம் மீது கானத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com