பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து இன்று முதல் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பி.ஏ.பி திட்டத்திற்குட்பட்ட ஆழியார் அணைக்கு, பல்வேறு நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து உள்ளது. மொத்தம் 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையில், சுமார் 3 ஆயிரத்து 864 மில்லியன் கன அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், அணைக்கு தண்ணீர் வரும் போது, மலை முகடுகளில் இருந்து பாறைகள், கற்கள், மண், மரத்துண்டுகள் உள்ளிட்டவை அடித்து வரப்பட்டு, அணையில் ஆங்காங்கே தேங்கி கொள்கிறது.
1962ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணையில், சுமார் 50 சதவீதம் வண்டல் மண் படர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மை காலமாக, அணையின் பெரும்பகுதி சேறும், சகதியுமாக இருப்பதால், தண்ணீரை அதிகளவு தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே, ஆழியார் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, அணை நீர்மட்டம் சரியும் நேரத்தில், அணையின் ஒரு பகுதியில் இருந்து வண்டல் மண் எடுக்க குடி மராமரத்து திட்டத்தின் கீழ் தமிழக அரசு உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது.
ஆழியார் அணையில் இருந்து விவசாயிகள், இலவசமாக வண்டல் மண் எடுத்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி அனுமதி அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை அடுத்து, கடந்த 28. 04 2023 முதல் 08. 06. 2023 வரை விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை லாரிகள் மூலம் இலவசமாக எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை சுமார் 65,000 கன மீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் சென்றதாக பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், மழை இல்லாததால், வண்டல் மண் எடுக்கும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பருவமழை எந்நேரத்திலும் பெய்யலாம் என்பதால், இன்று முதல் ஆழியாறு அணையில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.