பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு!

பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு!

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டி‌.எம்.சி கொள்ளளவும் கொண்டது.

இந்த அணையின் மூலம் ஈரோடு திருப்பூர் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் வட கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே உபரிநீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட கால்வாய் மூலம் இரட்டைப்படை மதகுகள்ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் கால்வாய் மதகுகளில் நன்செய் பாசனத்திற்காக இன்று முதல் போக பாசனத்திற்காக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தண்ணீர் திறந்து வைத்தார். இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது கீழ்பவானி வாய்க்காலில் முதற்கட்டமாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக இன்று மாலை 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டு கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்ட போது வாய்க்காலில் ஏற்பட்ட கரை உடைப்பின் காரணமாக தண்ணீர் முழுவதுமாக வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்பட்டதால் குறைந்த அளவே அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரினால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றால் தொடர்ந்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும் நீர் இருப்பு 30.31 டி.எம்.சி ஆகவும், நீர்வரத்து வினாடிக்கு 15200 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து அரக்கன் கோட்டை தடப்பள்ளி வாய்க்கால் பாசத்திற்கு 500 கன அடி நீர், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 500 கன அடி நீர், பவானி ஆற்றில் 14500 கன அடி நீர் என மொத்தம் 15500 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.