சமூக நீதிக்காக முதல் குரல் கொடுத்தவர் பாரதியார் - சபாநாயகர் அப்பாவு

சமூக நீதிக்காக முதல் குரல் கொடுத்தவர் பாரதியார் - சபாநாயகர் அப்பாவு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்ற பாரதியார் நினைவு நாள் விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் கலந்து கொண்டார்.

பாரதியார் நினைவேந்தல் நிகழ்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் நினைவு மண்டபத்தில் சுப்பிரமணிய பாரதியார் கலாச்சார பண்பாட்டு மையம் சார்பில் பாரதியார் நினைவு தினத்தினை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். பாரதியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து பன்முக வரலாற்றியல் மற்றும் இனமுறை இயல் வழிமுறைகள் என்ற புத்தகத்தினை வெளியிட்டு பேசினார்.

சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர்

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சமூக நீதிக்காக முதல் குரல் கொடுத்தவர் மகாகவி பாரதியார். அகிம்சை வழியில் ஜனநாயகத்தினை நிலை நிறுத்த முடியும் என்று எடுத்துக்கூறி வெற்றி பெற்றவர் மகாத்மா காந்தி, ஆனால் தற்பொழுது மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சோவிற்கு கோவில் கட்டி பெரிய தியாகி என்று கூறுவது வேதனையாக இருக்கிறது.

எப்படி பெற்ற சுதந்திரம், சுதந்திரத்திற்காக போராடியவரை சுட்டுக்கொன்று எத்தனை நாள்களாகி விட்டது. அதற்குள் இவ்வளவு மாற்றங்களா ? சுதந்திரம் நமக்கு எளிதாக கிடைக்கவில்லை, சுப்பிரமணி பாரதியார் போன்று எத்தனையோ தியாகிகளின் ரத்ததில் கிடைத்தது தான் சுதந்திரம். சுதந்திரத்திற்காக போராடியவர்களின் சுதந்திரத்தினை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல், சாதி, மத வேறுபாடு இல்லமால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று கனவு கண்டவர் மகாகவி பாரதியார். அந்த ஆட்சி தற்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கிறது.

பாஜக நிர்வாகிகள் வாக்குவாதம்

இந்திய மொழிகளில் தமிழ் மொழி தான் தமிழகத்திலும், பல வெளிநாடுகளிலும் ஆட்சி மொழியாக உள்ளது. உலகத்தில் அதிகளவில் பேசும் மொழி தமிழ். பாரதியார் கண்ட கனவினை தற்பொழுதைய முதல்வர் நிறைவேற்றி வருகிறார். உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார் என்றார்.

இதற்கிடையில் சபாநாயகர் வருவதற்கு முன்பு இளந்தாமரை கலை இலக்கிய அமைப்பு சார்பில் நடைபெறும் பாதியார் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி வருகை தர இருந்தார். அவரை வரவேற்ற ஓயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. சபாநாயகர் வரவுள்ளதால் நிகழ்ச்சியை முடித்துக்கொள்ளும்படி காவல்துறையினர் கூறியதால் பாஜக நிர்வாகிகளுக்கும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.