இலங்கைத் தமிழர் விவகாரம்...தலைமைச் செயலகத்திற்கு வர அனுமதி வழங்கிய அரசு....கைது செய்த காவல்துறை!

இலங்கைத் தமிழர் விவகாரம்...தலைமைச் செயலகத்திற்கு வர அனுமதி வழங்கிய அரசு....கைது செய்த காவல்துறை!

கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் இன ஒடுக்குமுறையால் பலர் அதிலிருந்து தப்பி தமிழ்நாட்டில் தஞ்சம் அடைகின்றனர். இவர்களில் பலர் அகதி முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். ஆனால் சந்தேகத்துக்குரியவர்கள் என சிலர் சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்றனர். மற்ற முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும் காலையில் காலையில் வேலைக்குச் சென்று மாலையில் திரும்பிவிட வேண்டும்.

சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் சிறையில் உள்ளது போலத் தான் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு மற்ற முகாம்களில் உள்ளது போன்று வெளியில் சென்று வர முடியாது. இந்த சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்களுடன் மற்ற வெளிநாட்டவர்கள் சிலரும் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே தங்களை சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும் என இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களை விடுவிக்கக் கோரி தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த ஜூலை 2 ஆம் நாள் வாகனப் பேரணியைத் தொடங்கினர். நேற்று இரவு சென்னை வந்தடைந்த அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் மனு கொடுப்பதற்கு திட்டமிட்டிருந்தனர். அதற்கு அனுமதி மறுத்த காவல் துறை பேரணி வந்தவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதிக்குச் சென்று அவர்களை கைது செய்தனர்.

இந்த வாகனப் பேரணியில் கலந்து கொண்ட 3 பெண்கள் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் கோரிக்கையைத் ஏற்று தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை 2 ஆம் நாள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 16 இலங்கைத் தமிழர்களை விடுவிக்க உள்ளதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.