சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி மற்றும் ஆ.ராசா ஆகியோரை கண்டித்தும், அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடல் முன்பு மாவட்ட பாஜக சார்பில் இந்துக்களையும் இந்துக்கள் தர்மத்தையும் இழிவாக பேசி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோரை கண்டித்தும், அமைச்சர் பி.கே சேகர்பாபு பதவி விலகக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது அரசுக்கு எதிராக முழக்கமிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு பாஜக சார்பில் 300க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அதேசமயம், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சனாதனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.