மின்கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் ஒயர்களை 15 நாட்களுக்குள் அகற்ற நோட்டீஸ் அனுப்புமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு காரணங்களால் மின் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், மின் விபத்துகளும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இந்த விபத்துகளை தடுப்பதற்கு மின் வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மின் கம்பங்களில் கேபிள் டிவி ஒயர்கள், விளம்பரப் பலகைகள் போன்றவற்றை கட்டி வைப்பதால், மின்விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க மின்கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் ஒயர்களை 15 நாட்களுக்குள் அகற்ற கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.