இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது... மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்...

மீனவர்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த கோரிக்கை
இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது... மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 1ம் தேதியன்று, கோடியக்கரையில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதில், மீனவர் கலைச்செல்வன் தலையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 9 மீனவர்கள் இந்த தாக்குதலில் இருந்து நல்வாய்ப்பாக தப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையை பிரயோகிப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ள முதலமைச்சர், இதற்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூடு சம்பவம், கடலோர பகுதியில் வசிக்கும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். நம் நாட்டு மீனவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கை கடற்படை சர்வதேச சட்டங்களை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடைமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறை நிகழ்த்தாமலும், அவர்களது வலைகளையும், படகுகளையும் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்த பிரச்சினைக்கு நீடித்த அரசியல் தீர்வை காண வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com