"காவிரி - முதலமைச்சரின் மௌனம்; தமிழர்களுக்கு துரோகம்" பி ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!

Published on
Updated on
2 min read

கர்நாடகாவில் செப்டம்பர் 26 பந்த் போராட்டத்தை சட்ட விரோதம் என அறிவித்து தடை செய்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக விவசாயி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிஆர்.பாண்டியன் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு காவிரி நீர் பற்றாக்குறையால் 3.50 லட்சம் ஏக்கரில் கருகத் தொடங்கிவிட்டது. சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி துவங்க முடியாமல் தடைபட்டுள்ளது. இதனை பார்த்து விவசாயிகள் மனமுடைந்து கண்ணீர்விட்டு கதறுகிறார்கள். 

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் குருவைப் பயிரை காப்பாற்ற விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீரை 15 தினங்களுக்கு திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டு உடனடியாக தண்ணீரை விடுவிக்க உத்திரவிட்டுள்ளது. 

இந்நிலையில் கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கூடாது என போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இப்போராட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான வகையில் தீர்ப்பை அவமதிக்கும் நோக்கோடு நடைபெற்று வருகிறது. 

கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் என்ற பெயரில் கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வருகிற 26 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் முழுமையிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளனர். இதன் பின்புலமாக அம்மாநில அரசு செயல்படுவதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் வாய் திறக்காமல் மௌனம் காப்பது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு செய்கிற துரோகம் மட்டுமின்றி கர்நாடகாவில் வாழக்கூடிய தமிழர்களுக்கும் செய்யும் துரோகமாகும். 

2015ம் ஆண்டு காலத்தில் சித்தராமையா ஆட்சி காலத்தில் கர்நாடகாவில் பந்த் போராட்டம் என்கிற பெயரில்  நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. தமிழர்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள் அடித்து உடைக்கப்பட்டன. தமிழர்கள் அகதிகளாக அடித்து விரட்டப்பட்டனர். இந்த செயலை சிததராமையாவே சிறையில் இருந்த கொடும் குற்றவாளிகளை விடுதலை செய்து அவர்கள் மூலமாக கலவரங்களை தூண்டி மிகுந்த பெரும் சேதத்தை அரங்கேற்றியதை நினைவுப்படுத்துகிறேன். இது அனைவருமே அறிந்த விஷயமாகும். இந்த நிலையில் மீண்டும் தற்போது சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைந்து இருப்பதால் வருகிற 26 ஆம் தேதி நடைபெறும் பந்த் போராட்டம் மிகப்பெரிய கலவரமாக வெடித்து தமிழர்களுக்கு பேரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. 

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக ஒரு மாநிலத்தில் பந்த் போராட்டம் நடத்துவதை அம் மாநில அரசு வேடிக்கை பார்ப்பது சட்ட விரோதம் என்பதை மத்திய அரசுக்கு எடுத்துரைத்து பிரதமர் நேரடியாக தலையிட்டு கர்நாடகாவில் பந்த் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் போராட்டங்களுக்கு தடை விதித்திட மத்திய அரசு முன் வர வேண்டும். இல்லையேல் கர்நாடகாவில் மிகப்பெரும் கலவரம் தீவிரமாகும் தமிழர்களின்  சொத்துக்கும், உயிருக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை எச்சரிக்கிறேன். 

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட அடிப்படையில் தண்ணீரை பெற்று தருவதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மத்திய அரசின் உதவியோடு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

கருகும் குருவைப் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். சம்பா சாகுபடி விவசாயிகள் துவங்காமல் மனமடைந்துள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாயை ஊக்க நிதியாக வழங்கி சம்பா சாகுபடியை துவக்குவதற்கு தமிழ்நாடு அரசுஅவசரா கால நடவடிக்கைகளை துவங்கிட வேண்டும். சம்பா சாகுபடி செய்வதற்கான விதைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உரிய முறையில் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையேல் தமிழ்நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும் அரிசி உற்பத்தி அழியும் என எச்சரிக்கிறேன் என்றார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com