மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மலை தொடர்ச்சியை ஒட்டியுள்ள தென்காசி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைப்பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடிமின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் பகுதிகள், தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.