அதி கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்!

சென்னை, திருவள்ளூர், செங்கப்பட்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு 'மிக்ஜாம்' என பெயரிடப்பட்டுள்ளது. இது சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 290 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாச்சந்திரன், மிக்ஜாம் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுபெறக்கூடும் என தெரிவித்துள்ளார். 

மேலும், வடக்கு திசையில் தெற்கு ஆந்திரா கடற்கரைக்கு இணையாக நகர்ந்து 5-ஆம் தேதி காலை நெல்லூருக்கும், மசூலிபட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிக கன மழை பெய்யும் என்றும், நாளை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

மிக்ஜாம் புயல் நாளை தீவிர புயலாக வலுபெறக்கூடும் என்றும், அப்போது வலுவிழந்து புயலாக கரைய கடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையில் கடலோர மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திரா, கடலூர் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் 5-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com