புயல் நிவாரண நிதிக்கு ஊதியத்தை அளிப்பதாக முதலமைச்சர் அறிவிப்பு!

புயல் நிவாரணத்திற்காக தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிதிக்கு வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை என்பது கடந்த 47 வருடங்களாக வரலாறு காணாத கன மழை என்றும், இந்த இயற்கை பேரிடரால் ஒரு கோடிக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பேரிடர் சென்னை மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கே ஏற்பட்டுள்ள பேரிடர் என்றும், மழைநீர் வடிகால்வாய் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தி இருந்ததால் தான் பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பேரிடர் பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு உதவியாக இருந்த முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு உதவியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத கால ஊதியத்தை பொது நிவாரண நிதிக்கு அளித்திடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மிக்ஜாம் புயல் நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com