சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய அவர், 95 வயது வரை மூத்திர சட்டியைத் தூக்கிக்கொண்டு இனத்திற்காக, நாட்டிற்காக போராடியவர் தந்தை பெரியார் என்றும்,
மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்பதை அடிப்படையாக கொண்டு, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய தந்தை பெரியார் மானமும், அறிவும் உள்ள மனிதர்களாக ஆக்குவதற்கு அறிவுலக ஆசானாக இந்த நாட்டை வலம் வந்ததாகவும் பேசியுள்ளார்.
நாடு முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார் என புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் நடத்திய போராட்டங்கள் யாராலும் காப்பி அடிக்க முடியாதவை என்றும், பெரியார் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் யாரும் எழுத மற்றும் பேச தயங்கியவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் நலம் எல்லாம் தம்முடைய நலமாக கருதி, தமிழருக்கு எதிரான எல்லாவற்றையும் தமது எதிரியாக கண்டவர் பெரியார் என்றும், பெரியாரின் போராட்டம் குறித்து பேச வேண்டும் என்றால், அவையை 10 நாட்கள் ஒத்தி வைத்துவிட்டு தான் பேச வேண்டும் எனவும் சூளுரைத்த அவர், பெரியாரின் குருகுல பயிற்சிதான் தி.மு.க.வை உருவாக்கியது என்றும், அதனை அண்ணா மெருகேற்றியதாகவும், கலைஞர் வளர்த்ததாகவும் தெரிவித்தார்.
கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம், பெண்ணினம் அடைந்த வளர்ச்சி, ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்த எழுச்சி ஆகியவற்றிற்கு இன்றைய தமிழ்நாடே சாட்சி என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வளர்ச்சியை, எழுச்சியை, சிந்தனையை உருவாக்கிய பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ம் தேதி, ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.