கோவை, செங்கல் சூளைகளுக்கு அபராதம்...! ரத்து செய்தது உயர் நீதிமன்றம்...!!  

கோவை, செங்கல் சூளைகளுக்கு அபராதம்...! ரத்து செய்தது உயர் நீதிமன்றம்...!!  
Published on
Updated on
1 min read

கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 185 செங்கல் சூளைகளுக்கு தலா 32 லட்சம் ரூபாய் சுற்றுச்சூழல் இழப்பீடு செலுத்தும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இப்பிரச்சனையில் உரிய நடைமுறைகளை பின்பற்றி இழப்பீடு தொடர்பாக ஆறு மாதங்களில் மறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

கோவை, தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 185 செங்கற்சூளைகளை மூடும்படி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் 2021 ஜூன் 13ஆம் தேதி உத்தரவிட்டார். அதேசமயம், இது சம்பந்தமாக வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

மாவட்ட ஆட்சியர், மத்திய- மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுவை நியமித்து சுற்றுச்சூழல் சேதத்தை மதிப்பிட உத்தரவிட்டது. இந்த குழு தீர்ப்பாயத்தில் அறிக்கை அளித்த பிறகு, ஒவ்வொரு செங்கற்சூளையும் தலா 32 லட்ச ரூபாய் சுற்றுசூழல் இழப்பீடாக் செலுத்த வேண்டுமென மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து செங்கற்சூளைகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தொடர்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள்.வி.எம்.வேலுமணி, வி.லட்சுமி நாராயணன்  அடங்கிய அமர்வு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரம் இல்லை என்ற வாதத்தை ஏற்க மறுத்தது. 

மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஆய்வு செய்த கூட்டுக்குழுவின் அறிக்கையை செங்கற்சூளைகள் தரப்பிற்கு வழங்காதது இயற்கை நீதியை மீறிய செயல் என்றும், இழப்பீட்டை நிர்ணயிக்க உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் கண்டித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

அதேசமயம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய நடைமுறையை பின்பற்றியும், கூட்டுக் குழுவின் அறிக்கையின் நகலை ஒவ்வொரு செங்கற்சூளை தரப்பிற்கும் வழங்கி, அவர்களின் விளக்கத்தை பெற்று, இழப்பீடு நிர்ணயிப்பது தொடர்பாக காரணங்களை கூறி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நடைமுறைகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com