141 பேரின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை...கோவை எஸ்பி தகவல்!

141 பேரின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை...கோவை எஸ்பி தகவல்!
Published on
Updated on
2 min read

மேட்டுப்பாளையத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் 141 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

புதிய கண்காணிப்பு கேமராக்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் 62 புதிய கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டினை காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று துவக்கி வைத்தார்.இதில் மூன்றாவது கண் எனப்படும் 10 அதிநவீன வாகன எண்களை கண்டறியும் கேமராக்கள் உள்ளிட்ட 62 கேமராக்கள் ரூ.10.40 லட்சம் மதிப்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இன்று துவக்கி வைக்கப்பட்டன.இதனால் குற்றச்சம்பவங்கள் குறைக்கப்படும் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிநவீன கேமராக்கள் மூலம் வாகனங்கள் திருடு போனாலோ அல்லது வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்தாலோ அந்த வாகனத்தின் எண்,ஹெல்மெட் போட்டுள்ளாரா?,சீட் பெல்ட் போட்டுள்ளனரா? வாகனத்தின் உரிமையாளர் குறித்த விவரங்கள் கணினியில் சேமிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

போதை பொருட்கள் பறிமுதல்

பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கஞ்சா விற்பனையாளர்கள் 67 பேரும்,டீலர்கள் 47 பேரும் கைது செய்யப்பட்டு 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 மேலும்,தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் கஞ்சா வியாபாரிகள் 50 பேரின்  நடவடிக்கைகளை கண்காணித்து வருவாய் கோட்டாட்சியர் மூலம் 13 பேருக்கு நீதிமன்றம் மூலம் பிணையம் மறுக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த ஆண்டில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரின் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது எனவும்,ஏற்கனவே கஞ்சா விற்பனை மூலம் சம்பாதித்த 2 பேரின் சொத்துக்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் 141 பேரின் வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 இந்நிகழ்ச்சியின் போது வருவாய் கோட்டாட்சியர் பூமா, மாவட்ட துணை கண்காணிப்பாளர் பாலாஜி,காவல் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன்,உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம்,முருகநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com