வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் மட்டும் 5050 விநாயகர் சிலை வைக்க காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதனை தொடர்ந்து புழல் காவல் நிலையத்தில், கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ராஜாராம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், விநாயகர் சிலைகள் 10 அடிகள் மட்டுமே இருக்க வேண்டும் மற்றும் காகிதம் களிமண்ணால் ஆன விநாயகர் சிலை மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும், ரசாயனக் கலவை விநாயகர் சிலைகள் இருக்க கூடாது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களும் சிலைகளுக்கு அருகில் இருக்க கூடாது என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும், விநாயகர் சிலை வைத்து வழிபடும் முறையும், ஊர்வலங்கள் செல்லும்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. புழல் உதவி ஆணையர் ஆதிமூலம், காவல் ஆய்வாளர்கள் காளிராஜன், விஜய் பாஸ்கர், ஸ்ரீஜா மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.