" கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை; நுகர்வோர் விரும்பவில்லை" ஆவின் அறிக்கை!

" கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை; நுகர்வோர் விரும்பவில்லை" ஆவின் அறிக்கை!
Published on
Updated on
1 min read

கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை என சர்வேயில் தெரியவந்துள்ளதாக ஆவின் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம், ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும் என கூறியதுடன், பாட்டிலில் அடைத்து விற்க முடியுமா என்று சர்வே நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்துக்கு  உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு  நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினீத் சார்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சென்னையில் வில்லிவாக்கத்தில் உள்ள திருமங்கலம் சாலை, வடக்கு ஐகோர்ட் காலனி, குமாரசாமி நகர், திருநகர், சிட்கோ நகர் பகுதிகளில் ஆவின் பாலை பாட்டிலில் விற்பனை செய்தால் ஆதரவளிப்பீர்களா? பாட்டிலில் விற்க வேண்டுமா? பாலித்தீன் கவரில் விற்க வேண்டுமா? என சர்வே செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சர்வேயில், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள திருமங்கலம் சாலை, குமாரசாமி நகர், திருநகர் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர், பாட்டிலில் பால் விற்பனை செய்யும்போது விலை அதிகமாக இருக்கும் என்பதால், பாலித்தின் உறைகளிலேயே தொடர மக்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளதாகவும், நுகர்வோர் விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து, நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com