சென்னை மந்தவெளியில் மனவுளைச்சல் காரணமாக வளர்ப்பு நாயை கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மந்தைவெளி ஆண்டிமன்ய தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகநாதன் (55), சாந்தி (48) தம்பதியினர். லோகநாதன் கார் டிங்கரிங் பணி செய்து வருவதுடன், மனைவியுடன் இணைந்து பால் வியாபாரமும் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளான நிலையில் குழந்தை பாக்கியம் இல்லாததால் பல ஆண்டுகளாக மனவுளைச்சலி இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை லோகநாதன் தனது நண்பரான தனபாலுக்கு, தாங்கள் இருவரும் பெரும் மனவுளைச்சலில் இருந்து வருவதால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும், தங்களை ஒரே குழியில் புதைத்துவிடுமாறும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தனபால் உடனடியாக லோகநாதன் வீட்டிற்கு விரைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லோகனாதனும் அவர் மனைவி சாந்தியும் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தனர். மேலும், தம்பதியர் தாங்கள் வளர்த்து வந்த நாயின் கழுத்திலும் பிளாஸ்டிக் கவரால் இருகக்கட்டிய நிலையில் நாயும் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளது.
இதனையடுத்து செய்வதறியாது திகைத்த தனபால் இச்சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தம்பதியரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வளர்ப்பு நாயின் சடலத்தையும் அப்புறப்படுத்தினர். மேலும், தம்பதியரின் தற்கொலைக்கு குழந்தையின்மையால் ஏற்பட்ட மனவுளைச்சல் தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.