மறைந்த தலைவருக்கு மரியாதை கொடுங்க… நாளிதழின் செயலுக்கு நீதிமன்றம் அதிருப்தி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை 'ஜெ' என குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மறைந்த தலைவருக்கு மரியாதை கொடுங்க… நாளிதழின் செயலுக்கு நீதிமன்றம் அதிருப்தி!
Published on
Updated on
1 min read

'பெரு மழையை வெள்ளமாக மாற்றிய தமிழக அரசு' என்ற தலைப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை 'ஜெ' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதல்வரின் நடவடிக்கைகள் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி தினமலர் பத்திரிக்கையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் நகர அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். தனக்கெதிரான இந்த வழக்குக்கு தடை விதிக்கக்கோரி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா  குறித்து அவதூறு செய்தி வெளியிடவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தனிப்பட்ட முறையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆட்சேபமான செய்தி வெளியிட்டிருந்தாலும், தனக்கெதிராக வழக்கு தொடர நகர அரசு தலைமை வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே நேரத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை 'ஜெ' என குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிக்கைக்கு அதிருப்தியும்  நீதிபதி தெரிவித்தார். மேலும், நாட்டின் தலைவர்கள் குறித்து செய்தி வெளியிடும் போது அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் பத்திரிக்கைகளுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். வழக்கு தொடர்ந்த தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com