தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்...

தொற்று பரவலின் அடிப்படையில் மாவட்டங்கள் 3ஆக  வகைப்படுத்தப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்...
Published on
Updated on
3 min read
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தொற்று பரவலின் அடிப்படையில் மாவட்டங்கள் 3ஆக  வகைப்படுத்தப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் வகை ஒன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
இங்கே ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில கடைகளின் செயல்பாடுகளுக்கு மாலை 7 மணி வரை நேரத் தளர்வு அளிப்பதுடன் கூடுதல் செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேநீர்க் கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் என்றும்.,
மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையில் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஹார்டுவேல் கடைகள் மற்றும் கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காலணிகள் விற்பனை செய்யும் கடைகள், பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள் கடைகள், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யும் கடைகள், சலவை, தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் என்றும், சாலையோர உணவுக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதியும், இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தானியங்கி பணம் வழங்கும் ஏ.டி.எம் சேவைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்றும், ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றிற்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் சேவை நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அழகு நிலையங்கள், சலூன்கள், குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத வாடிக்கையாளர்களை கொண்டு காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் இயங்கலாம் என்றும், பயிற்சி குழுமங்கள் பார்வையாளர்கள் இல்லாமல் திறந்தவெளியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை விளையாட்டு போட்டிகளை நடத்திக்கொள்ளலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை பயிற்சிக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்புக்கு பின்னர் உள்ள பணிகள், சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்டவற்றை நிபந்தனைகளுடன் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள சம்பந்தபட்ட மாவட்ட வட்டாட்சியரின் அனுமதி பெற்று ஒருநாள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி,  மற்றும் தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வகை இரண்டில்  இடம்பெற்றுள்ளன.
 
வகை 2-ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளின் செயல்பாடுகளுக்கு மாலை 7 மணி வரை நேரத்தளர்வு அளிப்பதுடன் கூடுதலான செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
 
பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/வீடியோ, சலவை தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், காலை 9 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
 
செல்பேசி மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
 
கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னணு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம்.
 
சாலையோர உணவுக்கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.  அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
 
மாவட்டங்களுக்கு இடையே பொதுபேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மூன்றாவது வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
இங்கே ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளிப்பதுடன், கூடுதல் செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீதம் பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்றும் அனைத்து துணிக்கடைகளும், நகைக்கடைகளும் குளிர் சாதன வசதி இல்லாமல் 50 சதவீத வாடிக்கையாளர்களை கொண்டு காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் இயங்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்களை பொறுத்தவரை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம் என்றும், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம் என்றும், திருவிழாக்கள், குடமுழுக்கிற்கான தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com