தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரத்து 137 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கொரோனா சிகிச்சை முடிந்து நேற்று மேலும் ஆயிரத்து 453 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 30 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 15 ஆயிரத்து 650 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக இருந்த நிலையில் நேற்று 173 ஆக உயர்ந்துள்ளது.