நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல் எதிரொலியாக பெட்ரோல் குண்டு வீச்சு? காவல்துறை விசாரணை!

நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல் எதிரொலியாக பெட்ரோல் குண்டு வீச்சு? காவல்துறை விசாரணை!

நத்தம் அருகே பன்னியாமலை கல்குவாரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹிட்டாட்சி வாகனத்துக்கு அடையாளம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத கல்குவாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்குவாரிகளால் இயற்கை வளங்கள் அழியும் ஆபத்துள்ளதாக கூறி நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சிவசங்கரன் அதற்கெதிராக போராடி வந்துள்ளார்.

சிவசங்கரன் மீது தாக்குதல்

தொடர்ச்சியாக கல்குவாரிகளுக்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவசங்கரன் மீது நேற்று கல்குவாரி குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தாக்குதலில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் அதே பகுதியில் சட்டவிரோதமாக கல்குவாரி நடத்தி வரும் ராஜா என்பவர் தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

சிவசங்கரனை தாக்கியதாக கல்குவாரி நடத்தி வரும் ராஜா என்பவரை பிடித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் அவருக்கு சொந்தமான ஹிட்டாச்சி வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. சி.சி. டி.வி காட்சியில் ஆறுக்கும் மேற்பட்ட நபர்கள் ஹிட்டாச்சி வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடும் காட்சி இடம் பெற்றுள்ளது இதை அடுத்து ஹிட்டாச்சி வாகனம் மல மலவென தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதையடுத்து மற்றொரு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் கல்குவாரியினர் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஏ.டி எஸ்.பி கபிலன் மற்றும் நத்தம் ஆய்வாளர் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சிவசங்கரன் தாக்கப்பட்டதற்கு எதிர்வினையாக இது நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவசங்கரன் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு “தமிழ்நாட்டின் இயற்கை வளப் பாதுகாப்புக்காக முன் களத்தில் நின்று போராடும் தனிநபர்கள், இயக்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்  அல்லது அவர்களுக்கு  பாதுகாப்புக்கென  துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.