தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் புதிய வால்வோ சொகுசு பேருந்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 3ம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களை ஊக்குவித்து, அவர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் மாவட்ட சிறப்பு பள்ளிகளில் பயிலும் 58 மாற்றுத்திறன் மாணவர்கள் தமிழ்நாட்டின் தலைச்சிறந்த சுற்றுலா தலமான மகாபலிபுரம் சுற்றுலா தலத்தினை “புதிய வால்வோ சிறப்பு பேருந்தில்” பயணித்து, கண்டுகளிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ரூபாய் 2.92 கோடி மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.