தீபாவளி பண்டிகை வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட வெளியூர், வெளிமாநிலங்களில் உள்ள பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்
இந்நிலையில் பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், கிளாம்பாக்கம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய இடங்களில் பேருந்து நிலையங்களை அமைத்து, 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திருச்சி தஞ்சை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.பூந்தமல்லியில் இருந்து வேலூர் மார்க்கமாக செல்வதற்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.
இந்த நிலையில் மாலை முதலே சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்து வருகின்றனர். மக்கள் ஒரே நேரத்தில் கார், பைக் என தங்களது வாகனங்களில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்வதால், தாம்பரம், பெருங்களத்தூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.