அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், குடும்பத்தலைவிக்கு 1000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று இபிஎஸ், ஓபிஎஸ் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், சேலத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திமுகவை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் குறைந்த நேரத்தில் எவ்வாறு நீட் தேர்விற்கு தயாராக முடியும். வேண்டுமென்றே திட்டமிட்டு நீட் தேர்வு ரத்துசெய்யப்படும் என அறிவித்து பெற்றோர்களை ஏமாற்றி தி.மு.க வெற்றி பெற்றுள்ளது.
கொரோனாவை தடுக்க திமுக அரசு புதிதாக எதுவும் செய்யவில்லை: கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செய்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை அவர்கள் பின்பற்றினார்கள் அவ்வளவுதான். கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது தி.மு.க அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதை மறந்து தி.மு.க.வினர் பேசுகின்றனர். எதிர்கட்சியை ஊடகங்கள் மறந்து விட்டது ; ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்கட்சியின் கடமை என பேசினார்.