அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ம்ற்றும் ஓபிஎஸ் சந்திப்பு?

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ம்ற்றும் ஓபிஎஸ் சந்திப்பு?

சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும்  சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இரண்டு நாள் பயணமாக வரும் 11 ஆம் தேதி தமிழகம் வரும் அமித் ஷா தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதைத்தொடர்ந்து வேலூரில் நடைபெறவுள்ள பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். 

இதற்காக நாளை சென்னை வரும் அமித்ஷா, சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி நட்சத்திர விடுதியில் தங்கவுள்ளார். அங்கு அவரை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டுள்ள நிலையில், ஓ பன்னீர் செல்வமும் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி டெல்லியில் வைத்து எடப்பாடி பழனிசாமி, அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினர். அந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்ததாகவும், பா.ஜ.க போட்டியிடவுள்ள தொகுதிகளை முன்கூட்டியே இறுதி செய்து தருவது தொடர்பாக ஆலோசித்ததாகவும் தகவல்கள் வெளியாயின. 

இந்நிலையில் நாளை எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்கும் போது பா.ஜ.கவுக்கான தொகுதிகள் குறித்தும், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தென்சென்னை, வேலூர், நாகர்கோவில், கோவை, நெல்லை, நீலகிரி, திருப்பூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும், அதை முன்வைத்தே தென்சென்னை மற்றும் வேலூருக்கு அமித்ஷா வரவுள்ளதாகவும் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com