சுற்றுலாப்பயணிகள் வீசி சென்ற  பிளாஸ்டிக் பையை சாப்பிட்ட காட்டு யானை!

பிளாஸ்டிக் பைகளை சாப்பிடும் வனவிலங்குகள் சிறிது காலத்தில் வயிற்றில் கோளாறு ஏற்பட்டு இறந்துவிடும் 

சுற்றுலாப்பயணிகள் வீசி சென்ற  பிளாஸ்டிக் பையை சாப்பிட்ட காட்டு யானை!

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி  மாவட்டம் 55% வனப்பகுதி மிகுந்த மாவட்டம் என்பதால் இங்கு உள்ள இயற்கை சூழலையும் வன விலங்குகளையும் பாதுகாக்கும் நோக்கில்  தமிழக அரசு நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளனர்.

ஆனால் தடையையும் மீறி சில சுற்றுலாப் பயணிகள் மறைமுகமாக நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதுடன், அந்த பிளாஸ்டிக் கழிவுகளை சாலைகளிலும் வனப்பகுதிகளிலும் வீசி செல்கின்றனர்.

இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி - தெப்பக்காடு சாலையில் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதிக்குள் வீசிச் சென்றுள்ளனர். அவ்வாறு வீசப்பட்ட பிளாஸ்டிக் பைகளை காட்டு யானை ஒன்று பொறுமையாக தனது தும்பிக்கையால் எடுத்து சாப்பிடும் காட்சி வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு பிளாஸ்டிக் பைகளை சாப்பிடும் வனவிலங்குகள் சிறிது காலத்தில் வயிற்றில் கோளாறு ஏற்பட்டு இறந்துவிடும்  சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், இயற்கை சூழல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் சுற்றுலாப் பயணிகள் பொறுப்புடன் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களை நீலகிரி கொண்டுவருவது தவிர்க்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.