திமுகவை பற்றி பேச இபிஎஸ்-க்கு தகுதி இல்லை -கனிமொழி...!!

திமுகவை பற்றி பேச இபிஎஸ்-க்கு தகுதி இல்லை -கனிமொழி...!!

திமுக அரசு பற்றி சொல்வதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுதியில்லை, அதனால் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியில் உள்ள ஆத்திகுளம் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித்திட்டம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள  மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி தொடக்க விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தனர். 

தொடர்ந்து வெள்ளாளங்கோட்டை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில் உட்கட்டமைப்பினை மேம்படுத்தி மருத்துவ உபகரணங்கள் மற்றும் நடமாடும் மருத்துவ வாகன சேவையை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் திமுக அரசின் நிதானமற்ற கொள்கையால் மக்கள் அவதிக்கு உள்ளாவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த கனிமொழி, "இதையெல்லாம் சொல்வதற்கு  எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுதியில்லை, அதனால் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com