அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று கொண்ட நிலையில், அதற்கு எதிராக ஒபிஎஸ் தரப்பில் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தம்மை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கர்நாடகாவில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றால், அதற்குரிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும். ஆகவே, தமது கோரிக்கையை ஏற்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் கோரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே, தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே உள்ளதாகவும், கட்சியில் வேறு பதவிகள் எதுவும் கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்றும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக இபிஎஸ் சட்ட விரோதமாக பதவியேற்று உள்ளதாகவும் அந்த மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை காரணம் காட்டி இபிஎஸ்-இன் பொதுச் செயலாளர் கோரிக்கையை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என்றும் ஒபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.