ஓ.பி.எஸ் தொகுதியில் ஈ.பி.எஸ் அணியினர் பொதுக்கூட்டம்!

ஓ.பி.எஸ் தொகுதியில் ஈ.பி.எஸ் அணியினர் பொதுக்கூட்டம்!

ஓபிஎஸ் சொந்த தொகுதியான போடியில்  எடப்பாடி பழனிச்சாமி அணியினர்  அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு   பொது கூட்டம் நடத்தினர். காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அதிமுக தற்போது ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி என்று இரண்டாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் ஓ பன்னீர்செல்வத்தின் சொந்தத் தொகுதியான போடியில் மேல சொக்கநாதபுரம்  கலையரங்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர்  பொதுக்கூட்டம் நடத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மற்றும் பொதுக்கூட்டமாக நடத்தப்பட்ட கூட்டத்தில்  எடப்பாடி பழனிச்சாமி  அணியின் கழக அமைப்பு செயலாளர் ஜக்கையன்,  ஆண்டிபட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தவசி, அதிமுக தலைமை பேச்சாளர் குன்னூர் சிவா  மற்றும் பலர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். தேனி மாவட்ட துணைச் செயலாளர் சற்குணம் தலைமையில் இந்த பொதுக்கூட்டம்  நடைபெற்றது. ஓபிஎஸ் இன் சொந்த தொகுதியான போடி சட்டமன்றத் தொகுதியில் முதன் முறையாக எடப்பாடி அணியினர் பொதுக்கூட்டம் நடத்தியதால் போடி டி.எஸ்.பி சுரேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பொதுக் கூட்டத்தில் பேசிய ஜக்கையன் ஓ. பன்னீர்செல்வத்தை ஒருமையில் கடுமையாக விமர்சனம் செய்தார்.சுயநல நோக்கத்தோடு ஓ.பன்னீர்செல்வம்  ஒவ்வொரு செயலிலும் ஈடுபட்டு அதிமுகவை அழிப்பதாகவும் கட்சியை விட்டு நீக்கப்பட்டு அதிமுக உறுப்பினரே இல்லை என்று போதிலும் வழக்குமேல் வழக்கு தொடர்ந்து கட்சிக்கு உரிமை கொண்டாடி வருவதும் அதனால் நீதிமன்றமே இவரை தலையில் கொட்டி கண்டனம் தெரிவித்ததும் தற்போது நடந்து வரும் நிகழ்ச்சிகள் என்றும் கட்சியைக் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவன் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும்                ஓ.பன்னீர்செல்வம் கட்சியையும் சின்னத்தையும் முடக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் கடுமையாக சாடினார்.